புதன், 5 பிப்ரவரி, 2025

அப்பா

அகரம் முதல் 
னகரம் வரை 
புள்ளிபெறாமலேயே 
புதைந்த எழுத்து -அப்பா


மனதுக்கு வைத்தவிருந்து
மரண பயம்
வாழ்கின்ற நாள் 
நரகமானது 
சாகின்றநாள் 
தெரிந்ததால் 

வெளிக்காட்ட முடியாத 
பாசப் புதையல்

கடைசிவரை
வெடிக்காமலே 
கருகிப்போன 
அன்பு வெடி

ஆன்மீகத்து 
சாதகப் பறவை 
ஆரம்பத்திலேயே -அஸ்தமனம் 
ஆனது உன் வாழ்வில்

தூங்கிப் போனது - நம் 
சாமி
எங்களை கைவிட்ட
தெய்வத்தின் தொழில் 
காத்தல்

மரணம் பயத்தின் 
கொடிய
நிமிடங்களில் 
நிழலாடிய 
பூலோக நரகம்
உனக்கு மட்டும்- வாழ்க்கை 

64 வது நாள் 30-10-2011

நரகம் வாழும்போது
உனக்கு - உன்
வாழ்க்கைக்கும் பின் 
எனக்கு

இன்னொரு முறையா
நீ 
வரப்போகிறாய்
அப்பாவாக 
எனக்கு

உனக்காக நான் எழுதும் 
வார்த்தைகள்
முழுமை அடையாமலேயே
முடிந்து போகிறது
உன்னைப் போலவே!

ஊமைத் தருமரே
இருட்டில் மூழ்கிய 
நெருப்பே

பராசக்தி!
கண்ணைக்
கொடுத்தபின்-எனக்கு
காட்சி கொடுத்தாலும்
என்ன பயன்?
நம்பவில்லை
பிழைக்க மாட்டாய் என்றபோது
மருத்துவனை

இல்லாத காலத்தில்
நீ இல்லை என்பதை

ரணங்களில் கழிந்த
கடைசி கணங்கள்
தர்மத்தின் மீதிருந்த
நம்பிக்கையையும்
சேர்த்தே கொண்டு போய்விட்டது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக