வெள்ளி, 18 ஜூலை, 2025

கறைகளுக்குக்காட்டுத்தீயின் வேகம்...

கதவுகளுக்குக்
கண்களே இல்லையென
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

சுவர்களுக்குச்
செவிகளே இல்லையென
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

சாளரங்கள்
சாட்சி சொல்லாதென
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

மதில்கள்
எல்லாம் மறைத்துக் கொள்ளும்
என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

வெகு திறமையாய் செய்த
பொருந்தாத செயல்கள் என்றும்
வெட்டவெளி காணாதென்று
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்

காற்றும் தூது செல்லும் 
என்பதை ஏனோ முற்றுமாய்
மறந்துவிட்டார்கள்

பிழைக்கப் பிழைக்கும்
தம் ரகசியங்களைத் தரணி முன் 
சுவாரஸ்யங்களாய் மாற்றும்
இருட்டறையின் அத்திறவுகோல் பற்றி 
ஒரு முறையேனும்  
சிந்திக்கத் தவறிவிட்டார்கள்

ஐயோ கைசேதமே என்றான பின்
வாதங்களில் ஏது பயன்

முள் ஏந்திய சேலை சில்லாகிய பின்
சாக்குப்போக்குகளில் ஏது நிஜம்

மெய்யாய் இங்கு 
தவறிச் செய்த தவறும்
தவறே தான்... இல்லையா

எப்படியோ
கறைகளுக்குக்
காட்டுத்தீயின் வேகம்...

Fathima Silmiya ✍️ 
- Rehna Writes -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக