புதன், 27 ஆகஸ்ட், 2025

கம்பனின் கவிச்சுவை


கம்பனின் கவிச்சுவை
************************
குத்துகின்ற தாடிக்குள் கொத்தான கவிதைகளை சொத்தாக வைத்திருந்த கம்பனின் கவிச்சுவையில் பித்தான நான் 

அவன் கட்டுத்தறியிலும் பிறக்கவில்லை அவன் கைத்தடியாகவும் வாழவில்லை 
அவன் காலடி அணியாகக் கூட அவனோடு நடக்கவில்லை என்பது தான் வருத்தம்...  

பிறப்பிலிருந்து இறப்புவரை பரந்தாமனைப் பாடுவதற்கு பிறப்பெடுத்த பெருங்கவியின் வரிகளில் சிறப்பென்று எதைச் சொல்வது? 

முதல் அடி முதல் முத்தாய்ப்புப் புள்ளி வரை முழுவதுமே இனித்திருக்க .. கட்டான அடிக்கரும்பாய் அத்தனையும் சுவைதானே? பருகப் பருகச் சுகம்தானே?

அயோத்தியின் அழகும் மிதிலையின் மிளிர்வும் இலங்கையின் இருப்பும் நெஞ்சம் விட்டு நீங்குமா?
சூரிய குல பெருமை தான் மாறுமா?

வரம் மூன்றை கொடுத்து தன் திறம் இழந்துத் துயர் கொண்ட தசரத ராசன் நிலை சொன்னதில் நிலைகுலைந்தேன்

அழகே உருவான அரங்கனை வருணித்த அழகென்ன... ? 

அவன் அருகே அணங்கான சீதையின் நடை இடை உடை சொன்ன விதத்தில் விடை காணாத வியப்பென்னில் வியாப்பித்துக் கிடப்பதென்ன...?

வில்லிக்கும்
வில்லுக்கும் அவன் சொன்ன சொல்லுக்குள் உடைந்தேன் நான் இராமன் கைப்பட்டது போலே

கல்லெல்லாம் மிதக்கிறது சீதை பெயர் வரைந்ததாலே என்றான் கம்பன் கம்பன் எழுத்தாணி பட்டபின்னே மூழ்கி மூச்சடக்க விரும்பவில்லை கற்களெல்லாம் உயிர்ப்போடு நீந்தித் திளைக்கிறது என்பது தானே உண்மை

வானரத்தை கடவுளாக்கி பேணுதர்க்கு அவதார புருசனையும் அங்கே அனுப்பி 
மறைந்திருந்தே வாலியினை தாக்குதலும் செய்வித்து இன்றும் வாதத்தை நிகழ்த்துகின்ற மாயக்காரனவன் என் கம்பன்

சடாயுவை எதிர்கொள்ள வந்து திரும்பிய இராவண வில்லிற்கே மூன்றுவமை தந்த கம்பன் கவித்திறம் கண்டு வட்டமிடும் அக்கழுகாக நானும் ஆனேன் 

கானகத்தே வாழ்ந்தாலும் கோணாத முகங்கொண்ட இலக்குவன் அவன் இன்னொரு இராமன் 

பாராளும் வாய்ப்பு வந்தும் அண்ணன் பாதுகையை அரியணையில் ஏற்றிய பெரும் பக்தன் பரதனென 
படைத்தானே...
அவனை பேராறு ஓடிவந்து வீழுகிற பள்ளமென விளித்தானே.. அது சிறப்பு

தாயான கைகேயி சேயான தன் மகனுக்கே பேயாகும் நிலைதனை ஏன் வைத்தான்... ?

எந்நிலையைக் கண்டாலும் தன்னிலையில் மாறாத அவதாரனை ஏன் கொடுத்தான் ?

அறம் நிலைக்கத் தானே அன்பு தழைக்கத் தானே

பத்து தலை இராவணன் பார்க்காமலே காதல் கொள்ள தூண்டிவிட்ட சூர்ப்பனகைக்கு உடைபட்ட மூக்கே சரி..

கோணல் புத்தி மந்தரைக்கு கோணிக்கிடந்த முதுகே சரி...

கோபமே படாத கோசலைக்கு கோவர்தனன் சேயானது பொருத்தமே...

சிறை பட்டச் சீதைக்கு அக்கினியே காவல் இறுதியில் அக்கினியில் சாதல் 
பத்தினிக்கு வந்த சோதனை பட்டவலி தந்த வேதனை என் சொல்ல ... கம்பனை.. 
படிக்கப் படிக்க வழிந்தது விழிநீர் விடிவில்லை மகளீருக்கென்று 

பாத்திரமும் ஆத்திரமும் 
அறமும் அன்பும் 
அறிவும் தெளிவும் 
ஆகச்சிறப்பாய் வடித்த கம்பன் 
வால்மிகியிடம் பிடித்தை எடுத்தான் பிடிக்காததை விடுத்தான் சுவை மிகு தமிழில் தொடுத்தான்... 

காட்சிக்கு கம்பன் 
கவிதை நீட்சிக்குக் கம்பன் 
என் கவிப் பயிற்சிக்கும் கம்பன் 
 
கம்பன் கவிநயத்தை கண்ட பின்னே எந்தக் கவிதையும் இனிக்க வில்லை இனியொரு காவியம் இப்படி பிறக்குமா ? சாத்தியமில்லை. ... 
   
மருத்துவர் தேவி

புதன், 20 ஆகஸ்ட், 2025

துளிகள்

இது தேனீக்களின் இயற்கை விதி

உதிரும் வலிகளேஅவைகளிற்கு போதுமானது

பிய்த்து எறிவதற்காக எந்த 
மலரினையும் 
சொந்தமாக்கிக்கொள்ள 
எண்ணாதீர்கள் ஏனென்றால்  செடியில்
அவை வாடி உதிரும் வலிகளே
அவைகளிற்கு 
    போதுமானதாகவே 
இங்கே இருக்கிறது ....

#இசைவிழிசந்திரன்.

கவனமாய் இருங்கள்

உனக்கானது