ஞாயிறு, 18 நவம்பர், 2018

தமிழ் பண்பாடும் கலாச்சாரமும் பேச்சு

அச்சம் இல்லாத வீரமும், மண்டியிடாத மானமும், உயிரையும் கொடுக்கும் கொடையும், தமிழ் நிலத்தின் தனிப்பெரும் பண்புகளாம். திசைகளை எட்டாக வைத்தான் , ஸ்வரங்களை ஏழாக வைத்தான், நான் சுவைகளை ஆறாக வைத்தான் நாடி நிற்கும் பூதங்களை ஐந்தாக வைத்தான். நான்கு பொருள்களை உயிரின் பயனாக வைத்தான் இயல் ,இசை,நாடகமாய் மொழியினை மூன்றாக வைத்தான். அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையை இரண்டாக வைத்தான். இத்தனையும் வகுத்த தமிழன் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான்.

ஒவ்வொருவரின் கடைமையை பற்றி உணர்த்தும் புறப்பாடல் நீங்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள்.
''ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
 நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"
என்னும் பாடலின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தமிழ் பண்பாட்டில் மிளிருபவை.
 வடமொழி மனுநீதி 12 வயது வரை மட்டுமே தந்தை மகனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிறது.
ஆனால் தமிழ் நெறியோ ஒரு மகன் சான்றோன் ஆகும்வரை தந்தையின் கடமை முடிவதில்லை என்கிறது இதுவன்றோ தமிழ் பண்பாடு.

 சாகா மருந்து கிடைத்தாலும் விருந்தினருக்கு கொடுக்காமல் தனியே உண்ணாதே என்கிறது தமிழ் வள்ளுவம் இதில் வென்று ஒளிருகிறது தமிழ் பண்பாடு.

போரில் தந்தையை இழந்தாள் தனையனையும் இழந்தாள் நேற்றைய  போரினிலே கணவனையும் இழந்தாள் வம்சத்துக்கு ஒரேபிள்ளை , எள்ளும் தண்ணீரும் இரைப்பதற்கு ஒரேபிள்ளை ,   கொள்ளிக்கு ஒரேபிள்ளை என்று இருந்த தனது  மகனை போர்க்களம் நோக்கி பகைவர்களை வென்று வா மகனே என்று அனுப்பிய வீரத்தாயின் விழுமிய பண்பு விளைந்தது தமிழ் பண்பாட்டில்.
 முதுகில் புண்படாமல் மார்பில் புண்பட்டு இறந்த மகனை நோக்கி இதுவன்றோ ஆண்மகனாய் நான் உன்னை பெற்றதற்கு பெற்ற பயன் என்று கண்ணீர் சிந்தாமல் செம்மாந்து தன் தேசத்திற்காய் வீரமரணமடைந்த மகனை உச்சிமுகர்ந்து வீரவணக்கம் செலுத்துவாள் தமிழ் தாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக