காப்பு
- உலகம் உயிர்பெறவே
- ஒற்றைகொம்பு உமைமகனே
- கன்னிமார் மழைமாலை
- கருணைதர வந்து கா.
நூல்
1
- காக்கும் தெய்வமென்று
- காலடைந்தோம் கன்னியரே
- காக்கை குருவியோடு கதியிலா
- மக்களுக்கு மழைதரவா.
2
- நிழல்தேடி வந்தபிள்ளையை
- அழவைத்த தாயுமில்லை-உனைஅல்லால்
- அழுதுவந்த நீர் துடைத்து
- அது மாற்றும் தெய்வம் இல்லை.
3
- நிலங்கீறி நீருக்கேங்கும்
- நீள்தென்னை உயிருக்கேங்கும்
- மாடாடு மலைகேங்கும்
- மனிதர்எல்லாம் பார்வைக்கு ஏங்கும்.
4
- தம்பரம்பாதை புழுதிமண்ணோ
- தாய்கருணை தண்ணிக்கு ஏங்கும்
- தறிகெட்டு பிழையே செய்து
- தாய்அருளென்று கோட்டை ஏங்கும்
5
- பஞ்சத்தில் பதைத்தே அம்மா
- நெஞ்சமெல்லாம் நாடோடி ஏங்கும்
- நீள்கலப்பை வேலைஇன்றி
- நெடுமர நிழலில் ஏங்கும்
6
- நினைநம்பி வந்த குடியோ
- நீகாக்கும் நாளுக்கு ஏங்கும்
- நெடுமரங்களின் கிளையோ
- நீர்வார்க்கும் கருணைக்கேங்கும்
7
- இமைசொட்டும் நீரேயன்றி
- இலைதுளிர்க்க பசையேஇல்லை
- உமைதரும் கருணையன்றி
- ஊர்வாழ வழியோ இல்லை
8
- கூழில்லை கஞ்சிஇல்லை
- குடிவாழ குடிநீரில்லை
- வேலையும் வெட்டியும்இல்லை
- விழதாங்கும் சுற்றமும் இல்லை
9
- காளையும் பசுவும்இல்லை
- கட்டிவைக்க நிழலும் இல்லை
- குட்டியும் ஆடும் இல்லை-அதுதின்ன
- குளிர்ந்த செடியொன்றும் இல்லை
10 [[
[[
]] ]]
- பொட்டலில் பட்டமரமின்றி
- குட்டிதின்ன பச்சிலைஇல்லை
- கற்றாழை தீனிஇன்றி
- காராம்பசுவுக்கு ஒன்றும் இல்லை
11
- மாரிமழை பெய்யாதோ
- மக்கள் பஞ்சம்தீர
- சாரல்மழை பெய்யாதோ
- சனங்கள் பஞ்சம் மாற
12
- கும்பிட்ட கைக்கு ஒரு
- குறையின்றி காத்த தாயே
- கொலுவிருந்து ஆடிவந்த
- குள்ளக்கோம்பை கன்னிமாரே
13
- மாரிமழை பெய்யாதோ
- மாடுகன்று மேய
- சாரல்மழை பெய்யாதோ
- சரளிக்காடு முளைக்க
14
- சாவிலும் பிறப்பிலும் தாயை
- நினைச்சவர் பரம்பரை
- சாமையோ தினையோ தாய்க்கு
- சமைச்சவர் பரம்பரை
15
- அறுவடைக்கு முன்பே-பொங்கலிட்டு
- படைச்சவர் பரம்பரை
- அழுதகண்ணீர் மாற்ற சன்னதி
- அடைஞ்சவர் பரம்பரை
16
- பாரும்தாயே சத்தியத்தை நம்பி
- பாதைசெதுக்கிய பரம்பரை
- பாதைவழி செதுக்கி
- பசியாற்றிய பரம்பரை
17
- கோப்பைய நாயக்கரோட –கூடி
- கொண்டாடிய பரம்பரை
- அரண்மனையில் இருந்து ஊர்கூடி
- ஆடிவந்தவர் பரம்பரை
18
- ஆற்றிலே நீராட்டி பூஜைக்கு
- அழைச்சவர் பரம்பரை
- அன்னக் குலவைஇட்டு ஆடி
- அலங்கரிச்ச பரம்பரை
19
- கோட்டைகட்டிக் கோவில்
- கட்டிய பரம்பரை
- கொண்டாடும் உருமிக்கு
- ஊடாடிய பரம்பரை
20
- ஏழைகள் எட்டுத்திக்கும்
- இங்கே வந்து கூடினாரே
- வாழையடிவாழையாய் எங்களை
- வாழவைத்த கன்னிமாறே
21
- பாழாய் போனதம்மா
- பச்சைபட்டு நெல்லு நிலம்
- பாரம்மா பாரும் என்றே
- பதைகுதம்மா மக்கள் உள்ளம்
22
- நீராய் வழிந்த ஓடை
- நெடுங்காலம் வறண்டு விட
- பாலாய் பொழிந்தநிலம்
- பட்டினியாய் ஓடுதெங்கோ
23
- காரம்மாகாரும் என்றே
- கதருமம்மா மக்கள் உள்ளம்
- பாரம்மாபாரும் என்றே
- பசியிலே கிடக்குதம்மா
24
- அழகாய்த் தான்குளிச்சு
- அங்கலாய்த்து நீநடக்க
- அம்சமாய் கை கோர்த்து-நீங்கள்
- அனைவரும் ஆற்றுக்குஓட
25
- அளந்து முப்பதடி
- அகலித்த பாதையெல்லாம்
- அடைத்து வழியடைச்ச
- அடங்காத பாவிஎல்லாம்
26
- அழிந்தொழிந்து போவதற்கோ
- அடங்காத கோபம் கொண்டாய்
- பிழைஅறியா பிஞ்சு எல்லாம்
- பிடிசோறுக்கு ஏங்குதம்மா
27
- பெத்தவளே பெரியவளே
- பெருமாளின் சோதரியே
- மூத்தவளே முத்துமாயே
- மூங்கிலணை மாரியளே
28
- காப்பவளே கருமாரி
- கருத்த முடியழகி
- கண்ணீருக்கு ஓடிவந்து
- கவலை மாற்றும் கன்னிமாறே
29
- நீராடும் சோலைஎல்லாம்
- நெடும்பாறை ஆனதம்மா
- காராளர் வாழ்ந்தநிலம்
- கண்ணீரில் வாடுதம்மா
30
- கோயில்மலைச் சோலையம்மா
- குள்ளக்கோம்பை காயுதம்மா
- கொழிஞ்சியும் காஞ்சுவாட
- கொடுவெயிலாய் ஆனதம்மா
31
- பாலக்கரட்டு பாதையெல்லாம்
- பச்சை செத்துப் போனதம்மா
- செத்தமலைச் செடிகளெல்லாம்
- இத்தகதி ஆனதம்மா
32
- மஞ்சமலை காயலாச்சு
- மாளவெயில் அடிக்குதம்மா
- மருகிவந்து மாடுகளெல்லாம்
- மழைவரத்துக்கு ஏங்குத்தம்மா
33
- சின்னமலை சிட்டும்கூட
- சிறகடிக்க பயக்குதம்மா
- சின்னக்குறத்தி அம்மா
- சிறிதுகண் பாருமம்மா
34
- பெரியகுறத்தி அம்மா
- பெரும்பஞ்சம் ஆனதம்மா
- பேர்பெற்றஊற்று எல்லாம்
- வரக்காஞ்சு போனதம்மா
35
- மலைபோல வருவதெல்லாம்
- பனிபோல போவதென்ன
- மழைக்கழுது மருகிவந்தோம் –கொஞ்சம்
- மனம் இறங்கும் கன்னிமாறே
36
- காப்பவளே கன்னிமாறே
- காதவழி பாதக்காரி
- கண்ணழுது நின்றோமம்மா
- கவலைமாற்றும் கன்னிமாறே
37
- கோயில்மலைச் சோங்குக்காரி
- குள்ளக்கோம்பை வீட்டுக்காரி
- பாலக் கரட்டுக்காரி
- பத்தினிக்கு காவல்காரி
38
- தம்பரம் பாதைக்காரி
- தெம்புதந்து தேத்தும் தெய்வம்
- அன்னதானப் பூஜைக்காரி
- உருமிஓசை ஆசக்காரி
39
- மஞ்சள் பட்டுக்காரி
- மங்கலப் பொட்டுக்காரி
- மஞ்சள்மலை கோப்புகாரி
- மனமிறங்க கெட்டிக்காரி
40
- குள்ளக்கோம்பை கோட்டைகாரி
- கொண்டாட்டப்பாட்டுக் காரி
- தேவராட்ட ஆசைக்காரி
- சேர்வையாட்ட பூஜைக்காரி
41
- பலகாததூர தேசக்காரி
- சமஸ்தானத்து ராஜதெய்வம்
- பதினெட்டுப் பட்டிக்காரி
- பலிஎடுப்பதில் ஆங்காரி
42
- ராஜதானிக்கோட்டைக்காரி
- வலையபட்டி கூட்டக்காரி
- தாதபட்டி காவல்காரி
- சந்தையூர் மந்தைக்காரி
43
- சங்கு சயண்டிக்காரி
- சத்தமான கொம்புக்காரி
- முத்துக்குடைக்காரி
- முழுநீளக் கொண்டக்காரி
44
- அட்சணம்பட்டிக்காரி
- அச்சம் அழிக்கும்தேவி
- கம்பூத்துபட்டிக்காரி
- கம்பங்கொல்லை காத்த தேவி
45
- தெப்பதுப்பட்டிக்காரி
- தப்புசெஞ்சா தீருமம்மா
- நாகமலைக் கோம்பைக்காரி
- கள்ளர்மட எல்லைக்காரி
46
- ஆணை மணியோசைக்காரி
- அழகு மயிலழகி
- ஆங்கார சிங்கக் காரி
- அடங்காத காளைக்காரி
47
- அன்ன வாகனக்காரி
- அழகான கருடக்காரி
- வராக ரூபக்காரி,வளைக்காரி
- தங்கச் சிலைக்காரி
48
- வாகனமோ ஓரேழு
- வந்த தெய்வமோ மறு ஏழு
- வாக்குத் தவறாமல்
- வரவேணும் அருளோடு
49
- ஒருவீடாய் இருந்து
- விருவீடாய்ப் பெருக
- மறுவீடு வந்த
- விருவீட்டுத் தெய்வம்
50
- ஒருவீடு மலை வீடு
- மறுவீடு மரத்தோடு
- இருக்கும் மனை மண்வீடு
- இங்கேவா அருளோடு
51
- ஒருபூசை ஆறோடு
- ஒருபூசை தெருவோடு
- ஒரு பூசை மணியோடு
- ஒரு பூசை மனதோடு
52
- மஞ்சள் வெயிலோடு
- மயங்கினோம் உலர்வோடு
- நெஞ்சம் நிறைவோடு
- நெருங்கிவா அருளோடு
53
- பதறினோம் பதிப்போடு
- பஞ்சமான கையோடு
- கைஎடுத்தோம் கனிவோடு
- கண்ணிறைந்த நீரோடு
54
- அம்மான்னு கூப்பிடவோ
- அருளோடு நீங்கள் வர
- ஆத்தான்னு கூப்பிடவோ
- ஆங்காரம் அமைதிபெற
55
- தெய்வமேன்னு தேடவோ
- தேவி உந்தன் அருள்கிடைக்க
- கடவுளேன்னு கதறிடவோ
- கண்ணழுகை தான் மறைய
56
- உடுக்கைப் பம்பை முரசொலிக்க
- உருமிமேளம்தான் முழங்க
- சித்தாடைக்காரி காரியம்மா
- சிரிச்சு முகம் பாருமம்மா
57
- கண்ணு நிரஞ்சவரே
- கலக்கம் மாத்தும் கன்னிமாறே
- காலங் கடந்தவரே
- கவலை தீக்கும் கன்னிமாறே
58
- குலம்காக்க வந்தவளே
- குள்ளகோம்பை நின்றவளே
- குடிகாக்க அமர்ந்தவளே
- கோலோச்சும் கன்னிமாறே
59
- மனசு நிரஞ்சவரே
- மகமாயி ஏழுருவே
- நினைச்சு அழுதவர்க்கு
- நிலை மாத்தும் கன்னிமாறே
60
- அடைக்கலம் காத்தவரே
- அருள்கொடுக்கும்கன்னிமாறே
- அம்மாவென்று அழைத்தவரை
- அனைச்சிருக்கும் கன்னிமாறே
61
- நினைச்சவர் காடுகரை
- நெடுங்காலம் காய்ந்து இருக்க
- கைகொடுத்து காத்த தெய்வம்
- கைகட்டி நிற்கலாமோ
62
- சிரித்தல் முத்துதிரும்
- சிந்தித்தால் ஞானம் வரும் – நீ
- பறித்தால் அது தடுக்க
- பாரில் ஏதும் இல்லையம்மா
63
- கொடுப்பாய் கொடுப்பாய் என்று
- கொண்டாட்டம் உனக்கெடுத்தோம்
- கொடுக்க வந்து கோட்டை நின்றாய்
- குள்ளக்கோமபை கன்னியரே
64
- எப்போது மழைகொடுப்பாய்
- ஏழைஉயிர்ஏங்குதம்மா
- எப்போது கைகொடுப்பாய்
- எங்கள் கை உயர்ந்ததம்மா
65
- எப்போது சரல்வரும்
- எங்கள் உயிர் சாகுதம்மா
- எப்போது தூத்தல் வரும்
- எட்டுத்திக்கும் துடிக்குதம்மா
66
- காலம் கலிகாலம்
- கைகொடுக்க ஏது தெய்வம்
- காலம் கலியானால்
- கன்றும் மாடும் ஏ துசெயும்
67
- பாவம் பெரும்பாவம்
- பலபாவம் மனிதர் செய்தால்
- பாழும்பசுமாடும்
- பசிக்குத் தின்ன ஏதுசெயும்
68
- காக்க வந்த கன்னிமாறே
- கைநழுவ விட்டீரோ
- கைகொடுத்த கன்னிமாறே
- கைகழுவி விட்டீரோ
69
- பார்த்த நிலம் தரிசாக
- பார்க்காமல் விட்டீரோ –மக்கள்
- கால்நடந்து வெளியேற
- காணாமல் விட்டீரோ
70
- ஊத்துக்குளி தான்காய
- உடையவரே விட்டீரோ
- ஊர்பிழைக்க வெளியேற
- உயர்ந்தவரே விட்டீரோ
71
- ஓடையெல்லாம் தான்காய
- ஒருதாயே விட்டீரோ
- பஞ்சத்தில் பிழைப்புத்தேட
- பார்வதியே விட்டீரோ
72
- மயிலும் இடம்மாற
- மகமாயி விட்டீரோ
- மக்கள் பதைத்தோட
- மாமாங்கம் விட்டீரோ
73
- அருஞ்சுனையும் அறுந்துவிட
- ஆற்றுபாறை காத்தாட
- அடங்காத பஞ்சம் வந்து
- ஆடித்தான் வச்சாலும்
74
- ஆத்தா உன் குள்ளக்கோம்பை
- அது தண்ணீர் வற்றாதே –இங்கே
- அடங்காத தாகத்துக்கு மடக்குத் தண்ணீர்
- அகப்படாத இடமாய் ஆனமாயமென்ன .
75
- தாழை மரம் தூர்ந்துவிட
- தண்ணீர் வழி தொலைஞ்சழிய
- பாழும் குடிதண்ணீருக்கு
- பஞ்சமம்மா உன் கோயிலிலே
76
- எல்லாரு கோம்பையிலும்
- நீருண்டு –எங்கள்
- கன்னிமார் கொம்பையிலே
- கல்லூத்து காயுதம்மா
77
- எல்லாரு கோம்பையும்
- காய்சாலும் –உங்கள்
- கன்னிமார் கோம்பையே
- காயலாமோ தேவியரே
78
- தெற்கெல்லை சின்னமலை
- தேடிஉன்னை சரணடைந்தோம்
- வடக்கெல்லை வதிலையிலே
- மகமாயி உருவமுண்டு
79
- மேற்கெல்லை நடுக்கோட்டை
- மேலவரும் மக்களுண்டு
- கிழக்கெல்லை நடகோட்டை
- கண்பாரும் எல்லையம்மா
80
- தென்கிழக்கு கள்ளர்மடம்
- தேடிவந்தால் அருள் கிடைக்கும்
- தென்மேற்கு பெரியகோம்பை
- தேனொழுகும் சுனைகளுண்டு
81
- வடகிழக்கு கோம்பைபட்டி
- வந்தாடுவார் ஊரைக்கூட்டி
- வடமேற்கு எழுவனம்பட்டி
- எல்லைஉந் தன் எல்லையம்மா
82
- ஆகாசமோ மேலே எல்லை
- அடங்ககாத்து அருள்புரிவாய்
- பாதாளமே கீழே எல்லை
- பாரும் கண்பாருமம்மா
83
- காக்கா இளைப்பாற
- கருவேல நிழலு -மில்ல
- மக்கள் இளைப்பாறும்
- மாமரங்கள் காய்ந்ததம்மா
84
- கொக்கு பசியாற
- குளங்குட்டை பெருகவில்லை-உன்
- மக்கள்பசியாற
- மக்கிப்போன நெல்லுமுண்டோ
85
- மாடு தொத்த மாடு
- பாலூத்தி வாழும் வீடு
- காடு கரை காய்ஞ்சா
- பசியாறல் எங்கே கூறு
86
- பூமி பொட்டல் பூமி
- வானம் பார்த்தே வாழும் பூமி
- சாமி நீதூங்கிபோனால்
- கதிவேறு என்ன சாமி .
87
- கன்று மாடு ஒன்னு – கூட
- கஞ்சி ஊத்தும் மண்ணு
- கையெடுத்த தெய்வம்
- கன்னிமாரென்று ஒன்னு .
88
- கஞ்சி ஊத்தும் பூமி
- காஞ்சு போன மாயம்
- நெஞ்சு பொறுக்கவில்ல
- வாழவழிகாமி .
89
- அஞ்சாதே என்று ஓர்நாள்
- அபிராம பட்டருக்கு சொன்ன
- செஞ்சொல் இங்கே சொல்லு
- நெஞ்சங் கொளிர்ந்து போக .
90
- மதுரா மடைச்சீமை
- மன்னர் உயிர் காத்து
- அதிரா முசுராம் படையை
- அடக்கி முடக்கி அழித்தாய் .
91
- நீதி இல்லா முசுராம்படையை
- நெஞ்சம் பதைக்க நசுக்கி
- பாறையில் குதிரைத்தடம்
- பதிய பார்வைகெடுத்த தேவி
92
- ஆயிரம் ஆண்டு முன்னே
- அம்மா செஞ்ச அருள
- நெஞ்சம் நம்பி வந்தோம்
- கொஞ்சம் வாழவழிகாமி
93
- தருவாய் மழையென்று
- தந்தோம் பொன் கவிதை
- வருவாய் மழை தரவென்று
- வந்தோம் உன்சன்னதிக்கே
94
- எழுவாய் மனம் கனிய
- இங்கே வந்த எங்களுக்கு
- வழுவாய் யாம் செய்ததெல்லாம்
- வல்லபையேமாற்றிடுவாய்
95
- கட்டிவந்த படலிதற்கு
- கண்கனிந்து அருள்வாயோ
- வெட்டிப் புலம்பலென்று
- வீணென்று விடுவாயோ
96
- சொல்லில் உணர்வெடுத்து
- சொல்லிவைத்தோம் உந்தனுக்கு
- உளம் கனிந்து உமையவளே
- ஓகோன்னு மழயருளே
97
- கண்காணா தேசமெல்லாம்
- காத்திருக்கும் தேவியரே
- காலடிக்கு வந்தவரை
- கவலை தீரும் கன்னிமாறே.
- மீன்பாறைக்கன்னி, கழைக்கூத்துக்கன்னி, பேழைக்கன்னி, பூமிக்கன்னி, வனகன்னி, மலைக்கன்னி முனிக்கன்னி,